காபி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? என்றால் இதற்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும். சிலர் காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுவார்கள். இன்னும் சிலரோ காபி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மிதமான அளவில் காபி குடிக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால் காபி குடிப்பதால் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்தால், உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு கப் காபியைச் சேர்ப்பது மிகவும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், காபி குடித்துவிட்டு நாளைக்கு 6 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களை விட, காபி குடிக்காமல் ஒரு நாளைக்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு 60 சதவீதம் அதிக இறப்பு ஆபத்து உள்ளது என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பயோமெட் சென்ட்ரல் பப்ளிக் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அமெரிக்காவில் 10,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் சீனாவில் உள்ள சூச்சோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது.
அதில் காபி குடிக்காதவர்களுக்கு இறக்கும் ஆபத்து அதிகமாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். காபி குடிப்பவர்களுக்கு இறக்கும் ஆபத்து பெருமளவில் குறைக்கப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
காபி குடித்துவிட்டு ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணிநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, இறப்பு ஆபத்து 24 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில், ” பெரியவர்களுக்கு காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பன்மடங்கு அதிகம். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காபி உட்கொள்வதால் வீக்கத்தை மோசமாக்கும் வளர்சிதை மாற்ற சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதாகத் தெரிகிறது. இது உட்கார்ந்தே இருக்கும் நடத்தை காரணமாக இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.” என்று தெரிவித்துள்ளனர்.
அதிக அளவு காபி உட்கொண்ட நபருக்கு காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது இறக்கும் ஆபத்து 33 சதவீதம் குறைவாக இருந்தது. அதிக காபி குடிப்பதற்கும் இதய நோய் குறைகிறது என்றும் இறக்கும் ஆபத்து குறைவாக இருப்பதற்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்த முந்தைய ஆய்வுகளுடன் இந்த முடிவுகள் ஒத்துப்போகின்றன.
காபியில் உள்ள காஃபின் மற்றும் பாலிபினால்கள் உட்பட பல சேர்மங்கள் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவை. அதாவது நீங்கள் காபி குடித்தால், அது உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. காபி எவ்வாறு மரண அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் அது உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஏதேனும் காரணத்தால் இறக்கும் ஆபத்து 40 சதவீதம் அதிகரிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, மாரடைப்பால் இறக்கும் ஆபத்து சுமார் 80 சதவீதம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : வீக் எண்டில் மட்டும் வாக்கிங் போனால்.. இந்த ஆபத்தான நோய்களை கூட தடுக்கலாம்.. புதிய ஆய்வில் தகவல்..