மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியைச் சேர்ந்த பனையன் (45) மற்றும் அவருடைய உறவினர்களான வீரணன், கருவாமொண்டி உள்ளிட்டோர் கடந்த 3ஆம் தேதி அந்த அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளனர்.
மது குடித்த பிறகு பனையன் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கமாக நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மேலூர் அரசு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
அவருடன் மது சாப்பிட்ட வீரனன் கருவாமொண்டி உள்ளிட்டோருக்கும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலூர் மேல வளைவு காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சிகிச்சை பெற்று வந்த இருவரில் வீரணனுக்கு மட்டும் எந்தவித உடல் நலக்குறைவும் ஏற்படாததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வீரணனின் தாயார் சமீபத்தில் காலமானார். அப்போது அவருடைய இறுதிச்சடங்கில் பனயனும், அவருடைய உறவினர்களும் பங்கேற்று கொண்டு சீர்வரிசை கொடுக்காததால் வீரணன் வருத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக, மதுவில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் திரவத்தை கலந்து கொடுத்து பனையனை கொலை செய்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வீரணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.