சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக திருச்சி சூர்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சி சூர்யா தாக்கல் செய்த மனுவில், “நான் குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறேன். எனது தந்தை திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நான் பாஜகவில் ஓபிசி அணிக்கு மாநில பொதுச் செயலாளராக இருந்தேன். நான் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மன்றங்களிலும் பங்கேற்கிறேன்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால் அவர் என்னை பழிவாங்குகிறார். அதே கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் என்னை மிரட்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். என்னை தாக்கவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2022இல் எனது வீட்டை சிலர் தாக்கினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
எனவே, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு கோரி கடந்த மாதம் மனு மூலம் போலீசில் விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும். அரசு விதிக்கும் உரிய கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளேன்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான முழு விவரங்களை அரசு தெரிவிக்கவில்லை. எனவே, கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Read More : கர்ப்பிணி பெண்களே..!! லிப்ஸ்டிக் பயன்படுத்துறீங்களா..? கருவுக்கு ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!