மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் மனைப்பிரிவிற்கும் மற்றும் மனை உரிமையாளர்களிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டுள்ளது. எனவே இணையவழி மூலம் மனை மற்றும் மனைப்பிரிவிற்கு வரன்முறைப்படுத்த 6 மாத காலம் அளித்து மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம்.
தமிழக அரசானது, நகர் ஊரமைப்பு இயக்குநர் மற்றும் உறுப்பினர்-செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவிற்கும் வரன்முறைக்கோரி விண்ணப்பிக்க, தமிழ்நாடு ஒப்புதல் பெறாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் விதி 2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் இணைய வழி மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இயலும். தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017-இல் இத்திட்டம் தொடர்பான உரிய திருத்தம் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.