காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 12ஆம் வகுப்பு மாணவி, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கோபிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோபியும், 12ஆம் வகுப்பு மாணவியும் காதலித்தப்படியே பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கோபி, பள்ளி மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.
அதற்கு மாணவியின் பெற்றோர், அவள் சிறுமி. அவளுக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர், மாணவியை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளைத் தேட துவங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், வீட்டில் தங்களது திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று அஞ்சி, மாணவியும், கோபியும் தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர், இருவரையும் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.