பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 75.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கில் பிரதமரின் PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதித்திட்டம் (நகர்ப்புறம்) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தகுதிவாய்ந்த அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை குடிமை வசதிகளுடன் கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.
2015 ஜூன் 25ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் பின்னர் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டது. வீடுகள் கட்டுவதற்கான எந்த இலக்கையும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை. வீட்டு வசதியின் உண்மையான தேவையை மதிப்பிடுவதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தேவை கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன. மேலும் 112.24 லட்சம் வீடுகளின் தேவையைப் பதிவு செய்துள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், 2023 ஜூலை 10ஆம் தேதி நிலவரப்படி 118.90 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பளிக்கப்பட்ட வீடுகளில் 112.22 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அவற்றில், 75.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2.00 லட்சம் கோடி (தோராயமாக) மத்திய அரசு வழங்கிய உதவியில் இதுவரை ரூ.1.47 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திட்ட காலத்திற்குள் (31.12.2024) அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்தும் நிலையை அமைச்சகம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறது. இந்த விவரங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கௌஷல் கிஷோர் வெளியிட்டுள்ளார்.