பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா இதயநோய் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தலைமைச் செயலாளர் கைலாசநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். பிரதமர் மோடியும் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி அவரின் குடும்பத்தினர் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பந்திப்பூர் செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளானதில் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.