வேலூர் நகரில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக 11 சவரன் நகைகளை திருடிய 19 வயது இளைஞரை கைது செய்து இருக்கிறது. நரேஷ் குமார் என்பவர் வேலூர் நகரில் வசித்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் பெற்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டை திறந்து பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டில் நகைகள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி ஆகியவை திருடு போயிருப்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்தார் நரேஷ் குமார். இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையை தீவிரமாக விசாரணை நடத்தினர்.
காவல்துறையின் அதிரடி விசாரணையில் துப்பு துலங்கியது. இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 19 வயது இளைஞரான ராஜேஷ் குமார் என்பவர் வீட்டில் ஆளில்லாத நேரம் பீரோவை உடைத்து 11 சவரன் தங்க நகைகளையும் 250 கிராம் வெள்ளியையும் திருடி சென்று இருப்பது தெரிந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்தனர். இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞர் தனது காதலிக்கு பரிசு வாங்குவதற்காக நகைகளை திருடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் மூலமாக அறிமுகமான பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார் அந்த நபர். காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசளிப்பதற்காக பக்கத்து வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நகைகளை திருடி இருக்கிறார். காவல்துறையின் விசாரணையில் இந்த உண்மையையும் ஒப்புக் கொண்டுள்ளார் அந்த இளைஞர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது வேலூர் காவல் துறை.