கிருஷ்ணகிரி அருகே அதிக வியூவ்ஸ்க்காக இளைஞர் செய்த செயலை அடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது நாகிரெட்டிப் பாளையம் . இந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகனான ஜனார்த்தனன் (22) தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அதே நேரத்தில் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டும் வருமானம் ஈட்டி வருகின்றார்.
இந்நிலையில் இவரது யூடியூப் சேனலுக்கு பல பிரபல செய்தி தொலைக்காட்சிகளில் இருந்து வீடியோ டவுன்லோட் செய்து அதற்கு வண்ணமயமான, மக்களை ஈர்க்கும் வகையில் தம்ப்னைல் வைத்துள்ளார். இது மட்டுமின்றி அரசின் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார். இது தொடர்பாக சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் புகார் அளித்தார். அரசின் திட்டங்கள் பற்றி மக்களை ஏமாற்றும் விதமாக செயல்பட்டதற்காக அவரை கைது செய்ய தேன்கனிக்கோட்டைக்கு விரைந்தனர். ஜனார்த்தன ரெட்டியை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.