சென்னை தாம்பரத்தை அடுத்த மாதம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாதம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்து அதிலிருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்த கஞ்சா ஆய்வகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூரிய ஒளி படாமல் குளுகுளு ஏசி அறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது காவல்துறையின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. சக்திவேல் என்ற இளைஞர் வாடகைக்கு வீடு எடுத்து அந்த வீட்டிற்குள் ஆய்வகம் போல் அமைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக சக்திவேல் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இவர்கள் தங்களது வீட்டில் வளரும் கஞ்சா செடிகளை பொடி செய்து கிராம் ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது தெரிந்திருக்கிறது. கஞ்சா மட்டும்ல்லாது சென்னையில் இருக்கும் மதுபான பார்களுக்கு இந்த கும்பல் போதை மாத்திரைகளையும் சப்ளை செய்திருக்கிறது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.