காணாமல் போன பசுவை கண்டுபிடிக்க கோரி வினோதமான முறையில் மனு அளிக்க வந்த நபரால் விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டி என தனது வீட்டில் நிறைய கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று காணாமல் போய் உள்ளது. விவசாயி கோவிந்தன் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் மாலை தனது மாட்டை கட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இரவு மீண்டும் மாட்டு கொட்டகைக்குச் சென்றவர் அங்கு மாடு இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் சுற்றுப்புறங்களில் எல்லா இடங்களில் தேடியும் மாடு எங்குமே கிடைக்கவில்லை.
எங்கு தேடியும் மாடு கிடைக்காததால் மர்ம நபர்கள் தான் மாட்டை திருடிச் சென்றிருப்பார்கள் என கருதிய கோவிந்தன் கஞ்சனூர் காவல் நிலையத்தில் கடந்த 19 தேதி புகார் மனு அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் 14 நாட்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த விவசாயி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் பசுவின் கன்றுக்குட்டிகழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி பதாகையை அணிய வைத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்டு அதிகாரிகள் விரைவிலேயே பசுவை கண்டுபிடித்து தருவதாக கோவிந்தனுக்கு உறுதியளித்தனர். இதனைடுத்து அவர் கன்று குட்டியுடன் புறப்பட்டு சென்றார். கன்று குட்டியுடன் வந்து தாய் பசுவை கண்டுபிடிக்க குடும்பத்துடன் வந்த விவசாயியால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.