அதிமுக சின்னத்தை முடக்க கோரி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவில் போட்டியிடப் போவது யார்? அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினருக்கு அந்த இடம் ஒதுக்கப்படுமா? என்று, எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிமுகவே நேரடியாக போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக தலைமை 114 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைத்துள்ளது. மேலும், வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி., பிரதமர் மோடிக்கு இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

