தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம் நகரை சேர்ந்தவர் கண்ணன். NVK டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை மற்றும் இ-சேவை மையம் நடத்தி வரும் இவர், திமுகவின் செயலாளராக உள்ளார். இவர் நடத்தி வரும் கடையில், சாயர்புரம் நடுக்குறிச்சியை சேர்ந்த 34 வயது விதவை பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் 2019 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இவர் தனது குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருடன் கண்ணன் நெருக்கமாக பழகியுள்ளார். ஒரு கட்டத்தில், இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து, நான் உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை பேசி, கண்ணன் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், திடீரென கண்ணன் உறவில் இருந்து விலகியுள்ளார். மேலும், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, கண்ணன் அந்தப் பெண்ணிடம் ரூ.3 லட்சம் கொடுத்து போலீசில் புகார் அளிக்காமல் சென்று விடு என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பதறிப்போன அந்தப்பெண், இது குறித்து தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் நேரில் சென்று புகார் அளித்தார். இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கண்ணன் மீது ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபடுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.