Indonesia: இந்தோனேசியாவின் பொதுத் தேர்தல் ஆணையம் பிரபோவோ சுபியாண்டோவை நாட்டின் 8-வது ஜனாதிபதியாக இன்று அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சையில் தோல்வியடைந்த இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களது மேல்முறையீட்டு மனு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபோவோ சுபியாண்டோ புதிய அதிபராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவின்(Indonesia) ஜனாதிபதியாக பிரபோவோவும் துணை ஜனாதிபதியாக ஜிப்ரான் ரகாபுமிங் ராக்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக KPU தலைவர் ஹசிம் அஸ்யாரி அறிவித்தார். இந்தோனேசியாவின் மொத்த வாக்குகளில் 59 சதவீதத்தை பெற்று பதவியேற்றிருப்பதாக ஹசிம் அஸ்யாரி சின்குவா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
பிரபோவோ மற்றும் ஜிப்ரான் ஆகியோர் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனீஸ் பஸ்வேடன்-முஹைமின் மற்றும் கஞ்சர் பிரனோவோ-மஹ்ஃபுட் எம்.டி ஆகியோரை வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் அனீஸ் பஸ்வேடன்-முஹைமின் ஆகியோர் 41 மில்லியன் வாக்குகளும் கஞ்சர் பிரனோவோ-மஹ்ஃபுட் எம்.டி ஆகியோர் 27 மில்லியன் வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்கிழக்கு ஆசிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் பிரபோவோ, இந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.