சென்னையில் டிச.25 இரவு, டிச.26 காலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்ட கடலோரங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோர பகுதிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. 25 ஆம் ம் தேதி இரவு / 26 ஆம் தேதி காலை மழை பெய்ய தொடங்கும். இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை பெய்யும். இந்த மழை துன்புறுத்தும் அளவுக்கு இருக்காது. ரசிக்க கூடிய ஒன்றாக இருக்கும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று வானிலை மையம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், ” மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இதனால் வரும் 24 ஆம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.