சமீப காலமாக, மனிதர்கள் மிருகங்கள் போல் செயல்படும் பல செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சமீபத்தில் திருப்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதே போன்ற சம்பவம் ஒன்று, தற்போது ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டம், சன்கணீர் காவல் நிலையத்தில், 48 வயதான பாகா ராமா என்பவர் காவலராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று, 32 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது பக்கத்து வீட்டுக்காரர் தன்னைத் தாக்கியதாக தனது 3 வயது மகனுடன் சன்கணீர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, மறுநாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்க்கு சென்ற காவலர், விசாரணைக்காக தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய பெண், தனது 3 வயது மகனுடன் காவலர் அழைத்துச் செல்லும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த காவலர், அந்த பெண்ணை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று, இரவு வரை விடுதியில் அடைத்து வைத்து, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம், அவரது 3 வயது மகன் கண்முன் நடந்துள்ளது. இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அன்று இரவே உயர் அதிகாரியான பிஜு ஜார்ஜ் ஜோசப் என்பவரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவலர் பாகா ராமா மீது பல்வேறு வழக்குகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவமனியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.