அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “விலைவாசி உயர்வு ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள் வாழ்வதற்கு அரசு உதவி செய்து வருகிறது. அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக சிறுமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பலர் வேலையை இழந்தனர். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று வரை கறுப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருவது எப்படி? எனவும் கேள்வி எழுப்பினார்.