கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்வதற்காக மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை வரும் 30-ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பரப்புரை முடியும் நாளில் கன்னியாகுமரிக்கு வந்து, வினேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் இருந்து மே 30-ஆம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், மே 31-ஆம் தேதி காலை தியானத்தை தொடங்கவுள்ளார். 24 மணி நேர தியானத்திற்குப் பிறகு ஒன்றாம் தேதி காலை, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை முடிந்த பின்னர், கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குகையில், ஒருநாள் முழுவதும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். கடந்த முறை இமயத்தில் தியானம் செய்த பிரதமர் மோடி, இந்த முறை குமரிமுனை நோக்கி வரவுள்ளார். பிரதமர் மோடி தியானத்திற்கு கன்னியாகுமரியை தேர்ந்தெடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.