பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் 9-வது ஆண்டு இன்று மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தசாப்தம் நெருங்குவதை இந்த கொண்டாட்டம் குறிக்கிறது. எதிர்பாராத வகையிலான இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தப் பாதுகாப்பு விவசாயிகளின் வருவாயை சீராக்குவது மட்டுமின்றி, புதிய நடைமுறைகளை செயல்படுத்தவும், ஊக்கமளிக்கிறது.
இந்த திட்டத்தின் வெற்றி மற்றும் தேவையை அறிந்து பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை தொடர்வதற்கும், வானிலை அடிப்படையிலான திருத்தியமைக்கப்பட்ட பயிர்க்காப்பீட்டு திட்டத்தை ரூ.69,515.71 கோடி பட்ஜெட்டுடன் 2025-26 வரை செயல்படுத்துவதற்கும் 2025 ஜனவரி மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கரீஃப் பருவ உணவுப் பயிர்கள் மற்றும் எண்ணெய் விதை பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச பிரீமியம் தொகை 2 சதவீதமாகும். ரபி பருவ உணவுப் பயிர்கள் மற்றும் எண்ணெய் விதை பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச பிரீமியம் தொகை 1.5 சதவீதமாகும். வருடாந்தர வணிகப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான பிரீமியம் 5 சதவீதமாகும். எஞ்சிய தொகை மத்திய அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பதற்கும், அவர்கள் கடன் வலையில் சிக்குவதை தடுப்பதற்கும், அறுவடை முடிந்த இரண்டு மாதங்களுக்குள் விவசாயிகளின் உரிமைகோரல் தொடர்பான நடைமுறைகளை முடிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயிகள் பயனடைவதற்கு உலகின் மிகப்பெரிய திட்டமாக இது விளங்குகிறது. விவசாயிகளின் சுமையை மேலும் குறைக்க சில மாநிலங்கள் விவசாயிகளின் பிரீமிய பங்கையும் தள்ளுபடி செய்கின்றன.