காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில், பெங்களூரு ஊரகம் , வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பெங்களூரு, மாண்டியா, மைசூர் ஆகிய 6 இடங்களுக்கு மட்டும் வரும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் தேசிய கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெங்களூருவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, ““இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் தாலியை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்று பேச்சு வந்தது. இந்த நாடு கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ளது. 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. உங்கள் தங்கத்தையோ அல்லது தாலியையோ காங்கிரஸ் பறித்ததா? போர் நடந்தபோது எனது பாட்டி இந்திரா காந்தி தனது தாலியையும், தங்கத்தையும் நன்கொடையாக அளித்தார். என் தாயின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.
இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் தாலியை தியாகம் செய்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய தாலியை அடமானம் வைக்க நேரிட்ட போது, பிரதமர் எங்கே இருந்தார்? மணிப்பூர் பெண்களின் தாலி குறித்து கவலைப்பட்டாரா? விவசாயிகள் 600 பேர் தற்கொலை செய்து கொண்டபோது, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பற்றி அவர் நினைத்தாரா? இன்று பெண்களை ஓட்டுக்காக பயமுறுத்துகிறீர்களா? நரேந்திர மோடி தாலியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருந்தால், அவர் இதுபோன்ற நெறிமுறையற்ற விஷயங்களைப் பேசியிருக்க மாட்டார்” என கூறினார்.
இதற்கு முன்னதாக, ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்களா? இதை நீங்கள் ஏற்பீர்களா? எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று பேசியிருந்தார். மோடியின் பேச்சுக்கு பதலடி கொடுக்கும் விதமாக பெங்களூர் தேர்தல் பரப்புரையில் பிரியங்கா காந்தி பேசியது குறிப்பிடத்தக்கது.