ஸ்தூலம், சூட்சுமம், காரணம் ஆகிய மூன்று முறையிலும் அழகிய திருவடிவம், மகாமேரு, பீஜ மந்திர முறையில் வழிபடப்படுபவள் இந்த தேவி. 16 வகைப் பேறுகளையும் அளிப்பதால் இவள் சோடஷி எனப்படுகிறாள். பிரபஞ்ச மையத்தில் அமிர்த சாகரத்தின் மத்தியில் ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்மாசனத்தில் ஸ்ரீஸ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள்.
அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த மாதர், மற்ற மகா வித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஸ்ரீலலிதாவை வணங்கினால் எல்லோரையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். அதனால்தான் ஸ்ரீவித்யை போன்ற மந்திரமோ, ஸ்ரீலலிதை போன்ற தெய்வமோ, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரமோ அன்றி வேறில்லை என்கின்றன ஞான நூல்கள்.
ஸ்ரீலலிதாவை ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் செய்து வழிபட்டால் பாவங்கள், தோஷங்கள் நீங்கும். இன்னும் சிறப்பாக ஸ்ரீலலிதாவைப் போற்றும் வழிபாடுகளில் உயர்வானதான நவாக்ஷரி மஹாஹோமத்தில் கலந்து கொண்டால் எண்ணியது யாவும் நிறைவேறும். ஸ்ரீலலிதா காமாட்சி அம்மனாக காஞ்சி பீடத்தில் அமர்ந்தது ஆடி மாத பூரத்தில்தான் என்கின்றன புராணங்கள். அதனால்தான் ஸ்ரீலலிதாவுக்கு ஆடி பூரமும் அனைத்து மாத பூர நாள்களும் விசேஷமானது. ஆடி பூர நாளில் வழிபட அம்பிகை மனம் குளிர்வாள். ஆடி பூரத்தில் நவாக்ஷரி ஹோமத்தில் கலந்து கொண்டால் சகல யோகங்களும் சௌபாக்கியங்களும் கிட்டும்.
குறிப்பாக குழந்தைப்பேறு, திருமண வரம், தோஷ நிவர்த்தி, உத்தியோக-வியாபார அபிவிருத்தி, ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் அதிகார பலமும் தொழில் வளமும் கிடைக்கும். சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஸ்ரீலலிதா பதவி உயர்வும் அரசியல் எதிர்காலமும் வழங்கக் கூடியவள். நிதி ஆதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மைகளை அளிக்கக் கூடியவள் என்கிறார்கள். சண்டிகாதேவியின் மூலமான நவாக்ஷரியை ஜபம் செய்து ஹோமம் செய்வித்தால் இகபர சௌக்கியங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதிகம்.
திருவள்ளூர் வழியில் செவ்வாய்பேட்டை அடுத்து அமைந்துள்ள கிளம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலலிதா மஹா திரிபுர ஸுந்தரி ஆலயம். ஒரு கையில் கரும்பு, அடுத்த கையில் பஞ்சபுஷ்பம், ஒரு கால் மடித்து மறுகால் தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோலத்தில் அன்னை வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டாலே மனதின் பாரமெல்லாம் நீங்கி நிம்மதியும் ஆனந்தக் கண்ணீரும் தோன்றிவிடும் என்பது உண்மை. ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எழுந்தருளி உள்ள இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது. குறிப்பாக இங்கு வந்து அம்பிகைக்கு வளையல் மாலை சாத்தி வழிபாட்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல இங்கு வந்து அம்பிகைக்கு சேலை சாத்தி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.
செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீலலிதா மஹா திரிபுர ஸுந்தரி ஆலயத்தை அடைந்தால் சகல நன்மைகளும் அடையலாம் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.