ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனை முன்னாள் முதல்வர் அடையாளம் தெரியாத சடலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் என முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி அவரின் உடல் கல்லூரி மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தது. பின்னர் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.
கல்லூரி முதல்வர் சந்தீப் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்க அரசு அவரை வேறு கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து சந்தீப் கோஷை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் அவரை இயக்குநராக நியமிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. இதன்பிறகு தலைமறைவாக இருந்த சந்தீப்பை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் பற்றி பேசிய முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி, கோஷ் மிகப்பெரிய ஊழல்வாதி என்றும் அவர் ஒரு “மாஃபியா” போன்றவர் என கூறியுள்ளார். மாணவர்களை தேர்வில் வேண்டுமென்றே தோல்வி அடைய செய்வார், டெண்டர் ஆர்டரில் 20% கமிஷன் வாங்குவார். ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடக்கும் ஒவ்வொரு வேலையிலும் பணத்தை கொள்ளையடித்து வந்தார். சந்தீப் கோஷ் மாணவர்களுக்கு மதுபானம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மருத்துவமனையில் அடையாளம் தெரியாத சடலங்களை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து விடுவார். இப்படி பல ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அவர் மீது 2023 இல் நான் புகார் அளித்தேன். ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.