தமிழ்நாட்டில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காய்கறிகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வந்த நிலையில், அரிசி விலையும் அதிகரித்து வருகிறது. கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கிச் செல்வதால் விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு, அறுவடை நேரத்தில் பலத்த காற்று வீசியது மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழையால் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவும் அரிசி விலை உயர காரணம் என அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.