கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய வசனங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து தற்போது நிலக்கரி எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும் அவர்கள் ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் அவர் என்றும் இல்லாத அளவிற்கு ஆவேசமாக பேசினார். இதனால் அவரது பேச்சுக்கள் காணொளிகளாக எடுக்கப்பட்டு இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் என்எல்சி இன் மூன்றாவது சுரங்கம் என ஆரம்பித்து சைமா சாயக்கழிவு ஆலை வரை கடலூர் மாவட்டத்தையே நாசம் செய்து வைத்திருக்கிறார்கள். சென்னையில் வாழும் எனக்கு கோபம் வருகிறது இந்த மாவட்டத்தில் வாழும் உங்களுக்கு கோபம் வரவில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்யும் வகையில் கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் முறியடிப்போம் என சூளுரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அன்புமணி என்றால் டீசன்ட் அண்ட் டெவெலப்மென்ட் பாலிடீஷியன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் வேட்டியை வரிந்து கட்டினால் நான் யார் என தெரியும் என தொண்டர்களை பார்த்து ஆவேசமாக பேசினார். மேலும் மேடையில் இருந்து சிறிது தூரம் நகர்ந்து வந்த அவர் பொதுமக்களை பார்த்து தான் கட்டி இருந்த வேட்டியை மடித்து கட்டி மக்களை நோக்கிப் பார்த்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் எல்லாம் உற்சாக கரஒலி எழுப்பினர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரிடம் மம்மட்டி ஒன்றை கொடுத்தனர் . அதனை தன் தோளில் தூக்கி போட்ட அவர் இதுதான் எங்கள் ஆயுதம் என கோஷமிட்டார். மேலும் கூட்டம் முடியும் தருவாயில் பாமக நிர்வாகிகள் அவருக்கு வீரவாளை பரிசளித்தனர். இனி எனக்கு வீரவாள் எல்லாம் வேண்டாம் மண்வெட்டியை பரிசாக கொடுங்கள் என கூறி சென்றார் அன்புமணி ராமதாஸ்.