திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவர்களுக்கு ராசாத்தி (33) என்ற மகள் இருந்தார். இவர், தனது தாய், கணவர் லட்சுமணன் (38), 2 குழந்தைகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கள்ளிப்பட்டி அருகே தனியார் இரும்புத் தொழிற்சாலையில், லட்சுமணன் கூலி வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ராசாத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், வள்ளியம்மாள், அவரது மகள் ராசாத்தி, மருமகன் லட்சுமணன் ஆகியோர் இரவு உணவுக்குப் பின் தூங்கச் சென்ற நிலையில், திடீரென கத்தியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த தாக்குதலில் தாய் வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் ராசாத்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிடந்த லட்சுமணனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர் யார்? என்பது குறித்து, போலீசார் விசாரித்தபோது, தகாத உறவில் ஏற்பட்ட விரிசலே, இந்த சம்பவத்திற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த 2 ஆண்டுகளாக ராசாத்தியுடன் தகாத உறவில் இருந்து வந்த சத்தியபிரியன் என்பவர் தான், இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராசாத்தியுடன் சத்தியபிரியனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அடிக்கடி ராசாத்தியின் வீட்டிற்கே சத்தியபிரியன் வந்து, அவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த கணவர் லட்சுமணன் மற்றும் தாய் வள்ளியம்மாள், ராசாத்தியை கண்டிக்கவே, அவர் சத்தியபிரியனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சத்தியபிரியன், இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சத்தியபிரியனை, போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.