நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி flying kiss கொடுத்தார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு. சபாநாயகரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் கூறுகையில், ”தன்னை மீண்டும் மக்களவை உறுப்பினராக அமர்த்திய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் கடந்த முறை அதானியை பற்றி பேசியது உங்களை காயப்படுத்தியிருக்கலாம். அதனால் உங்கள் மூத்த தலைவர் (பிரதமர் மோடி) வேதனைப்பட்டார். அந்த வலி உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் அதானியைப் பற்றி பேசவில்லை. எனவே, பாஜகவில் இருக்கும் எனது நண்பர்கள் பயப்பட தேவையில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சில நாட்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால், அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல” என்று சாடினார். இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு பிறகு எனது மனதில் இருந்து ஆணவம் அகன்றுவிட்டது. ஒற்றுமைப் பயணத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். விவசாயிகளின் விவரங்களை கேட்டறிந்தேன்“ என்று கூறினார். இறுதியில் ராகுல் காந்தி தனது உரையை முடித்த பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியபோது ‛‛இந்தியா” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ‛flying kiss’ கொடுத்து புறப்பட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக சாடினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வன்முறைகளையும் பட்டியலிட்டு கூறி இதெற்கெல்லாம் எப்போது நியாயம் கிடைக்கும் என்று கேட்டார்.
ராகுல் காந்தி flying kiss கொடுத்ததை பற்றி கோபமாக பேசிய ஸ்மிருதி இராணி பெண் எம்.பி.க்கள் இருக்கும் சபையில் flying kiss கொடுத்துள்ளார் ராகுல் காந்தி, பெண் மீது அதிக வெறுப்பு கொண்டவரால் மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும் என்று கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. பாஜக பெண் எம்.பி.க்களை ராகுல் காந்தி அவமதித்து விட்டார் எனக் கூறி ஸ்மிருதி இராணி தலைமையில் பாஜக பெண் எம்.பி.க்கள், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.