இந்தியாவின் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய ராஜ்நாத் சிங் “ இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துள்ளார். அவரது அறிக்கையை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நான் கோருகிறேன்..” என்று தெரிவித்தார்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஒரு முக்கிய எதிர்க்கட்சி தலைவர் வெளிநாடு சென்று இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து பேசுகிறார்… அவர் இந்திய மக்களையும், பாராளுமன்றத்தையும் அவமதித்துள்ளார். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் உள்ளது, எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேசலாம். ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்ர். .
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசிய போது ” பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்று லண்டனில் ராகுல் காந்தி கூறினார். இது லோக்சபாவை அவமதிக்கும் செயலாகும். இந்த அறிக்கை மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது ஜனநாயகத்தை அவமதித்ததற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்..
கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.. அப்போது பேசிய அவர் “ கர்நாடகாவில் தேர்தல் நடத்தும் போது, 12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா, கர்நாடக மக்கள், இந்திய மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார்..
பசவேஸ்வரா சிலை லண்டனில் உள்ளது. ஆனால் அதே லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் பல நூற்றாண்டுகளாக நம் வரலாற்றால் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த உலகில் எந்த சக்தியும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை சேதப்படுத்த முடியாது. இருந்த போதிலும் சிலர் அதை தொடர்ந்து சேதப்படுத்த முயற்சிக்கின்றனர்..” என்று ராகுல் காந்தியை வெளிப்படையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..