காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்..
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி உள்ளார்.. அந்த கடிதத்தில் ராகுல்காந்தி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை குலாம் நபி ஆசாத் முன்வைத்துள்ளார்..
மேலும் “ காங்கிரஸ் கட்சியில் கலந்தாலோசனை முறையை ராகுல்காந்தி முற்றிலும் அழித்துவிட்டார்.. காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார்.. கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் ராகுல்காந்தியும் அவரின் உதவியாளர்கள் மட்டுமே எடுக்கின்றனர்.. காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதற்கும் தேர்தல்களில் மோசமான செயல்பாட்டிற்கும் ராகுல்காந்தியின் முதிர்ச்சியின்மை தான் காரணம்..
இந்த முதிர்ச்சியின்மைக்கு மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்று, ராகுல் காந்தி ஒரு அரசாங்க ஆணை கிழித்தெறிந்தது… இந்த ‘குழந்தைத்தனமான’ நடத்தை இந்தியப் பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மற்ற அனைத்தையும் விட இந்த ஒரே ஒரு நடவடிக்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது..
ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை தகர்த்த ‘ரிமோட் கண்ட்ரோல் மாடல்’ இப்போது இந்திய தேசிய காங்கிரஸுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராகுல்காந்தி கட்சி தலைமைக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி என்பது செயலிழந்த கட்சியாக மாறிவிட்டது. இதிலிருந்து கட்சி மீள்வது கடினம்..” என்று குறிப்பிட்டுள்ளார்..