தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.