மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரவு தங்குவதற்காக ராஜ்பவனுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது. அவர் இன்று மேற்கு வங்கத்தில் மூன்று இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண், கொல்கத்தாவில் உள்ள ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் சீண்டல், துன்புறுத்தல் அளித்ததாக கூறியுள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019 முதல் ராஜ்பவனில் ஒப்பந்த ஊழியராக இருக்கும் பெண், இரண்டு சந்தர்ப்பங்களில் கவர்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது, ஏப்ரல் 24 ஆம் தேதி கவர்னர் முன் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். நேற்றும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டதாக அந்த பெண் தனது புகாரில் குற்றம் சாட்டினார், அதைத் தொடர்ந்து காவல்துறையை அணுகினார் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து ஆளுநர் ஆனந்த போஸ் கூறியது, என்னை களங்கப்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேட சிலர் முற்சிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.ஊழல், மற்றும் வன்முறைக்கு எதிரான எனது “போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது. வாய்மையே வெல்லும் என்று ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியலமைப்பின் 361 வது பிரிவு ஆளுநருக்கு எந்தவொரு குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக விலக்கு அளிக்கிறது. இதுகுறித்து கொல்கத்தா காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அரசு அதிகாரியான ஆனந்த் போஸ் நவம்பர் 2023 இல் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.