குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோரிடம் விசாரிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை முடக்கினர்.

இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. குறிப்பாக உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையின் அடிப்படையில் சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.