ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பலோடி மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியும் இன்ஸ்டாகிராம் இன்ஃபளுயன்சருமான அனாமிகா பிஷ்னோயை குடும்ப தகராறில் சுட்டுக் கொன்றார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர் அனாமிகா பிஷ்னோய். இவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது கடையில் இருந்த போது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகல் பொழுதில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக அனாமிகா மற்றும் அவரது கணவர் மகிராம் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நகர் ரோடு பகுதியில் அமைந்திருக்கும் அனாமிகாவின் கடைக்கு வந்த அவரது கணவர் மகிராம், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மிகவும் அருகில் இருந்து அனாமிகாவை சுட்டு இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அனாமிகாவை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர். தலைமறைவாக இருக்கும் அவரது கணவர் மகிராமை தேடி வருகின்றனர்.
இந்தக் கொடூர சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் பிரபலம் தனது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.