கடந்த மக்களவை தேர்தலின்போது, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது, தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா..? யார் யாரோ சொல்வதை வைத்துக் கொண்டு எங்களைக் கேட்க வேண்டாம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதாவது சொன்னோமா?” என காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு தேமுதிக மகளிர் அணியினருடன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளது.
தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அன்னை மொழி காப்போம்; அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் கேப்டனின் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்து பிரேமலதா விஜயகாந்த் சென்றுவிட்டார்.