கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவியை, திமுகவைச் சேர்ந்த 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ராஜினாமா செய்தார். அதற்கான மறைமுகத் தேர்தல், ஆகஸ்ட் 6ஆம் தேதியான நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலியாகவுள்ள மேயர் பதவியை கைப்பற்ற, பெண் கவுன்சிலர்கள் இடையே பலத்த போட்டி நிலவியது.
கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். சில கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை மூலமாக தலைமைக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 29-வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் மேயர் கிட்டு அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட பவுல்ராஜ் என்ற கவுன்சிலர் எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.