சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.