ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் அல்லது நீக்கம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ, குடும்பத்தில் புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டாலோ, அதனை ரேஷன் கார்டில் புதுப்பிக்க வேண்டும். அதற்கு, முதலில் https://www.tnpds.gov.in/ என்கிற மாநில உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின்னர், உறுப்பினரின் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் குறித்த தகவலை தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் இணையதளத்தில் இணைக்க வேண்டும். இவ்வாறு, இணையதளத்தில் பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். இதன் பின்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் செய்யப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்புமக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்டவழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.