திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாலூரை சேர்ந்தவர் தமிழரசன் (50). இவர் தன்னுடைய மனைவியின் சொந்த ஊரான சோமரசம் பேட்டை அருகே உள்ள புங்கனூர் கீழத்தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் அதே பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் அவர் தற்காலிக எடையாளராக பணிபுரிந்து வருகிறார்.
அவருடைய மகன் பிரசாந்த் (27) என்பவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இதே போல அவர்களது உறவினர்களான புங்கனூர் மேல தெருவை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மகன்களாக சரத்குமார் (26), ரஞ்சித் (24) உள்ளிட்டோரும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் புங்கனூர் அல்லித்துறை பிரதான சாலையில் அமைந்திருக்கின்ற ஒரு டீக்கடை அருகே பிரசாந்த் அவருடைய தந்தை தமிழரசன் உடன் இன்று உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரத்குமார் மற்றும் ரஞ்சித் உள்ளிட்ட இருவரும் பிரசாந்தை பார்த்து உன்னுடைய ஜல்லிக்கட்டு காளை ஆட்டுக்குட்டியை போல இருக்கிறது, அது காளையா அதை அடக்கி விடுவோம் என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
இதனால் பிரசாந்த், ரஞ்சித், சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை பிரசாந்தின் தந்தை தமிழரசன் தடுக்க முயற்சித்திருக்கிறார் இதில் தமிழரசனின் நெஞ்சில் அடி விழுந்ததை தொடர்ந்து, அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை இருசக்கர வாகனத்தில் திருச்சி அரசு பொது மருத்துவமனை க்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சகோதரர்களான சரத்குமார், ரஞ்சித் உள்ளிட்ட இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.