ரயில்வே அமைச்சகம் 9,000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதாக வெளியான செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளது. இந்தச் செய்தி கற்பனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், ஆர்பிஎஃப் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது எந்த அச்சு அல்லது மின்னணு ஊடகம் மூலமாகவும் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி பரவி வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரயில்வே அமைச்சகம் அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம், அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் மாதம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, இந்திய ரயில்வே ஒரு பெரிய அமைப்பு என்றும், ஆட்சேர்ப்பு ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும் கூறினார்.