ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கார்த்திக் (26). இவர், சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து, தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறினார். ஊழியர்கள் பார்த்த போது தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டு கருகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனே முதலுதவி அளித்த நிலையில், பின்னர் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கார்த்திக்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. திருமணமாகாத கார்த்திக்கிற்கும், அவரது நெருங்கிய உறவினரான 27 வயது திருமணமான பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கார்த்திக் வேறொரு பெண்ணையும் காதலித்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்த, உறவுக்காரப் பெண் கார்த்திக் மீது ஆசிட் வீசியுள்ளார். இந்நிலையில், ஆசிட் வீசிய இளம்பெண்ணை பவானி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.