இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டில் இருந்து லேப்டாப், கணினி மற்றும் டேப்லட் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக இறக்குமதி செய்ய மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் , டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டிஜிஎஃப்டி) தெரிவித்துள்ளது. இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹெச்.எஸ்.என் 8741 என்ற வகைக்குள் வரும் லேப்டாப்கள், ஆல்-இன் ஒன் கம்யூட்டர்கள் மற்றும் டேப்லட்கள் உட்பட 20 எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான லைசன்ஸ் பெற்று இறக்குமதி செய்வோர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள், அனுமதிக்கப்பட்ட அளவு லக்கேஜூடன் கொண்டு வர தடையில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்றை, தனிப்பயன்பாட்டிற்கு வாங்குவதற்கும், இணையதளம் வாயிலாக வாங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றிற்கான இறக்குமதி வரி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பேக்கேஜ் விதிகளின் கீழ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று டிஜிஎஃப்டி கூறியது. இந்த வர்த்தக இணையதளங்கள் மூலம் செய்யப்படும் இறக்குமதிகள் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு இந்தியா எல்.இ.டி டிவிக்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், தற்போது, லேப்டாப், கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக இறக்குமதி செய்ய இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் திருவிழாக்காலம் தொடங்க உள்ள நிலையில், எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் இந்த சூழலில் அரசு இந்த கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆப்பிள், டெல், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.