மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை 15 இடங்களில் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை அடுத்த மதுரா டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி 65 வயதான சேதுமாதவன் மற்றும் அவரது மனைவி 61 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் நிர்மலா தேவி. அவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் 24 வயதான பொறியியல் பட்டதாரி இளைஞர் பிரேம். இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் எதிர் எதிர் வீட்டு என்பதால், வாகனம் நிறுத்துதல், வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்தல் தொடர்பாக சிறு சிறு பிரச்சினைகளும், இதனால் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2025 மார்ச் 6ஆம் தேதியான இன்று நிர்மலா தேவி வீட்டிற்கு வெளியே தண்ணீர் தெளிப்பதற்காக வழக்கம்போல் வெளியே வந்துள்ளார். அப்போது, மீண்டும் இளைஞர் பிரேமுக்கும், நிர்மலா தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம், வீட்டிற்குள் இருந்து காய்கறி கத்தியை எடுத்து வந்து, நிர்மலா தேவியை 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
நிர்மலா தேவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிரேமை கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு அடித்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் பிரேமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.