அனைத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் போலியான அரசாணையை பரப்பிய நபர்கள் மீது ஆந்திர அரசின் நிதித்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. .
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் ஆந்திர அரசின் பெயரில் ஒரு தகவல் வைரலானது.. அதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரியில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஊதியத்தை அமல்படுத்தியதன் ஒரு பகுதியாக ஊழியர்களின் ஓய்வூதியத்தை 60லிருந்து 62ஆக உயர்த்தியாக வெளியான தகவல் ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனால் இந்த அரசாணை போலியானது என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது… ஆந்திர அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் (நிதி) எஸ்.எஸ்.ராவத், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62லிருந்து 65 ஆக உயர்த்தி நிதித்துறை வெளியிட்ட அரசாணை ஒன்று பரவி வருவதாக காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணை தவறானது.. அது அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.. இந்த தவறான அரசாணை மூலம் ஊழியர்களும் பொதுமக்களும் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். குற்றவாளிகள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறை தலைமையகத்தில் ஆந்திர நிதித்துறை புகார் அளித்தது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..