அரும்பாக்கம் வங்கியில் கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியது தொடர்பாக முக்கிய கொள்ளையனான முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக் கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் உள்பட அவரது நண்பர்கள் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முருகன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் மிகுந்த நபரான முருகன் தான் கொள்ளையடிப்பதற்காக திரைப்படங்களையே உதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முருகன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “அரும்பாக்கம் வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்கு வங்கியில் எந்த இடத்தில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் என்று நன்றாகவே தெரியும். வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன்.

பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், வங்கியில் கொள்ளையடிப்பதற்காக நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டேன். கொள்ளைக்கு தேவையான பைக், கார்கள் தேவைப்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் உதவினர். அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம்”. இவ்வாறு அவர் கூறினார். கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் திரைப்படத்தை 10 முறை பார்த்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே வலிமை படத்தில் வரும் வசனத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பாக முருகன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொள்ளை சம்பவத்தை நடத்த கடந்த 10 நாட்களாகவே திட்டமிட்ட முருகன், கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு அரும்பாக்கம் வங்கிக் கிளையின் இணைய சேவையை துண்டித்து விட்டதாகவும், இதனால் வங்கியின் செயல்பாடு டெல்லியின் தலைமையகத்திற்கு தெரியாமல் முடக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். டெல்லியில் இருந்து ஊழியர்களை தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள் என்பதை தெரிந்து, வங்கிகளில் இருந்த 3 ஊழியர்களின் செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 15 நிமிடத்தில் ஸ்ட்ராங் ரூமில் இருந்த லாக்கரிலிருந்து ஒட்டுமொத்த தங்கத்தையும் கொள்ளையடித்து விட்டதாக முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

சமீபகாலமாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தங்களது கொள்ளை சம்பவங்களுக்கு உதாரணமாக திரைப்படங்களை உதாரணமாக எடுத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக கூட, நெட்பிளிக்ஸில் வெளியான மணி ஹைய்ஸ்ட் வெப்சீரிசை பார்த்துவிட்டு இந்தியாவிலே பல இடங்களில் கொள்ளை முயற்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.