பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இத்திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து அதில் சிலருக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மீதமுள்ளோர் பலர் மீண்டும் ரூ.1,000 வேண்டி மேல்முறையீடு செய்துள்ளனர். அவை அனைத்தும் தீவிரமாக பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களுக்கான உரிமைத் தொகை கிடைக்கும் எனவும், தகுதியுள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கணக்குகளையும் முறையாகக் கணக்கிடும் வரை அரசு ஓயாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர் மாதம் முதல் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 சென்றடைவதற்கான அனைத்து முன்முயற்சியையும் அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கிடையே, மேல்முறையீடு செய்தவர்களுக்கு நேற்று முதல் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.