மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.14) நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.