பன்னாட்டு விமானக் கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அவரவர்கள் சொந்த ஊருக்கும், சுற்றுலா நகரங்களுக்கு சென்றும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதனால், ஒரு சிலர் ரயில் மற்றும் விமானங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

விமானத்தில் பயணம் செய்வதனால் நேரம் மிச்சப்படுவதுடன், விரைவாகவும் செல்ல முடிகிறது. இந்த விடுமுறைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். அதிகளவு விமான பயணத்தை விரும்புவதானால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருகின்றது. பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், சண்டிகர், கோவா, கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கோவாவுக்கு வழக்கமாக ரூ.4,500 கட்டணம் இருந்து வந்த நிலையில், தற்போது ரூ.13,000 முதல் ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது. கொச்சிக்கு ரூ.4,000 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து விமான அதிகாரிகள் கூறுகையில் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் விற்கப்பட்டவுடன் அதிகளவு கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் தான் கிடைக்கும் என தெரிவித்தனர்.