fbpx

குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்…! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் தனது செய்தி குறிப்பில்; குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள், அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன், உயிர்களை இழந்தும், தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு, தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793; அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901. இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

English Summary

Tamil Nadu Chief Minister Stalin has ordered a compensation of Rs 5 lakh to the Tamils who died in the Kuwait fire.

Vignesh

Next Post

இதுவே கடைசி..! தொடர் விடுமுறையொட்டி அவகாசம் நீட்டிப்பு..! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Fri Jun 14 , 2024
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக,சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களுக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது, இதில் 547 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவு எண் கொண்டவை. இந்த வெளிமாநில ஆம்னி […]

You May Like