ஆதார் எண்ணை பதிவு செய்ய வந்துள்ளதாகக் கூறி, மூதாட்டியை ஏமாற்றி தங்க செயின் மற்றும் ரூ.20,000 பணத்தை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்த பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பெரியகிணறு தெருவில் மூதாட்டி லட்சுமி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சென்று, ஆதார் எண்ணை எங்களிடம் பதிவு செய்தால் மாதந்தோறும் ரூ.500 கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை நம்பிய மூதாட்டியும் வீட்டிற்குள் சென்று ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், ஆதார் அட்டையை கீழே தவறவிடுவது போல் நடித்த அந்த பெண், ஆதார் அட்டையை எடுக்க மூதாட்டி கீழே குனிந்தபோது வீட்டிற்குள் நுழைந்து ஒரு சவரன் செயின் மற்றும் 20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டி லட்சுமி, அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.