விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டு பேரணிக்கு அரசு சார்பில் அனுமதி மறுத்ததை அடுத்து உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று பேரணி நடத்த அனுமதி வாங்கியது ஆர்எஸ்எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி தொடர்ந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மட்டும் ஏன் தொடர்ந்து தடை விதிக்கிறீர்கள்? என நீதிபதி கேள்விக்கு, “ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதாக சொல்லும் இடங்களில் மசூதிகள், தேவாலயங்கள், குடியிருப்புகள் இருக்கின்றன. மேலும், ஆர்எஸ்எஸ் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் ‘அகண்ட பாரதம்’ அமைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வரைப்படத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை அவர்கள் இணைத்துள்ளனர். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதுகுறித்து என்ஐஏ விசாரிப்பது அவசியம்” என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் அகண்ட பாரதம் குறித்து தெரிவித்த போது குறுக்கிட்ட நீதிபதி, அதனால் அரசுக்கு என்ன பிரச்சினை? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் இது மிகவும் முக்கியமான விவகாரம் எனவும், பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும், இந்த பேரணியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் வாதிட்டட வழக்கறிஞர்கள், ” அகண்ட பாரதம் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை எனவும், கடந்த முறை பேரணிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போதும் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும், அப்படி வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு” எனத் தெரிவித்தனர்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் என்றும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் பேரணிக்கான வழித்தடத்தை ஐந்து நாட்களுக்கு முன்னதாக இறுதி செய்யப்பட வேண்டும் எனவும், வழித்தடத்தில் ஏதேனும் மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கூறினால் அது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்க வேண்டும் எனவும், பேரணி தொடங்கும் இடம் மற்றும் நிறைவடையும் இடம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.