சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
சீனாவில் அதிவேகமாக பரவிவரும் BF 7 கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக டெல்லி மும்பை சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் அல்லது தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், அவர்களது ரத்த மாதிரிகளை உடனடியாக மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.